Thursday, December 3, 2009

வாரமலர் கிரிவலம் கிளம்பும் முன் வாரமலர் கிரிவலம் கிளம்பும் முன்

பவுர்ணமியன்று, கிரிவலம் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வருகின்றனர்; குறிப்பாக, திருக்கார்த்திகையன்று, தீபத்தை தரிசிக்கும் வகையில் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும்.
கிரிவலம் செல்லும் பலர், "பதினாலு கி.மீ., சுற்றளவுள்ள மலையை இரண்டு மணி நேரத்தில் வலம் வந்து விட்டேன்...' என்று பெருமையடித்துக் கொள்வர். இப்படி, கடமைக்காக மலை வலம் வருபவர்களுக்கு, அண்ணாமலையாரின் அருள் கிடைத்து விடாது; முறைப்படி கிரிவலம் வர வேண்டும்.
கிரிவலம் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன், பிரம்மச்சரிய விரதம் கடைபிடிக்க வேண்டும். வெற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள் அதை தவிர்க்க வேண்டும். நடந்தே மலை வலம் வர வேண்டும். ஆண்கள், சட்டை அணியக்கூடாது; குடை பிடிக்காமல், செருப்பு அணியாமல் நடக்க வேண்டும். தரையில் பாதங்களை வைக்கும்போது ஓசை இருக்கக்கூடாது; மெதுவாகச் செல்ல வேண்டும்.
செல்லும் வழியிலுள்ள மலையை அவ்வப்போது கை கூப்பி வணங்க வேண்டும்; தேவாரம், திருவாசகப் பாடல்களை தனித்தோ, கூட்டமாகவோ பாடியபடியே செல்ல வேண்டும்; கிரிவலத்துக்கு முன் உணவைத் தவிர்க்க வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் மட்டும் பால், பழம் போன்ற எளிய உணவு வகைகளைச் சாப்பிடலாம்; ஆனால், மலையை வலம் வரும் நேரத்தில் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.
கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கக் கோவில்களுக்குச் சென்று, நெய் தீபமேற்றி வழிபட வேண்டும். கிரிவலபாதையை மிகச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கிரிவலத்தின் போது, சொந்தக்கதை பேசுவதை தவிர்த்து, அமைதியாக செல்வதே அண்ணாமலையாரின் அருளை நமக்குப் பெற்றுத்தரும்.
தற்போது, அண்ணாமலையில் இத்தகைய நிலை இல்லை. கூச்சல் போட்டுக் கொண்டும், சொந்தக்கதை பேசிக்கொண்டும், ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் கிரிவலம் என்ற பெயரில் வீணாக கால்களைப் புண்ணாக்கிக் கொள்கின்றனர். மேலும், கிரிவலத்தால் பாவத்தையும் சுமந்து திரும்புகின்றனர். இவர்களது வாழ்வில் பல பிரச்னைகள் ஏற்படும் என்று திருவண்ணாமலை தல புராணம் கூறுகிறது.
மற்ற மலைகள் போல் நினைத்து, மிகச்சாதாரணமாக இம்மலையை கடந்த சூரியபகவானுக்கு ஏற்பட்ட நிலை பற்றி, இந்நூலிலுள்ள ஆதித்த சருக்கம் என்னும் பகுதியில்கூறப்பட்டுள்ளது.
ஒருமுறை, இந்த மலையைக் கடந்த சூரியபகவான், மலை வடிவாய் நிற்கும் அண்ணாமலையாரை மனதாலும் நினைக்கவில்லை. உடனே, அவர் பவனி வந்த ஏழு குதிரை பூட்டிய தேர், தீப்பிடித்து, குதிரைகள் உயிர்விட்டன. மயக்கநிலைக்குச் சென்று கொண்டிருந்தார் சூரியன். அப்போது, அவர் முன் தோன்றி, "அண்ணாமலையை பக்தியுடன் வலம் வா; உனக்கு ஏற்பட்ட இந்த நிலை நீங்கும்...' என்றார் பிரம்மா. அவரது தேரைப் புதுப்பித்துக் கொடுத்தார்; குதிரைகளுக்கு உயிர் கொடுத்தார். பின் பக்தியுடன் மலையை வலம் வந்தார் சூரியன். அவருக்கு ஏற்பட்ட சாபம் நீங்கியது.
தேவர்களில் ஒருவரனான சூரியனுக்கே இந்தக்கதி என்றால், நம்மைப் போன்ற மனிதர்களின் நிலை பற்றி கேட்க வேண்டியதில்லை. எனவே, கார்த்திகை தீபத்துக்கு திருவண்ணாமலை செல்பவர்கள், மிகுந்த பயபக்தியுடன், அமைதியாக மலையை வலம் வாருங்கள். அவ்வாறு செய்பவர்கள், எல்லா செல்வங்களையும் அடைவர்; கார்த்திகை தீபம் போல் அவர்களின் வாழ்வில் ஒளி வீசும்.

No comments:

Post a Comment